பிரித்தானிய பொதுத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெறுமா? உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்குமா?
பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. லேபர் கட்சி, அதிக இருக்கைகளைக் கைப்பற்றி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
என்றாலும், இதே நிலை எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் இருக்குமா? லேபர் கட்சி பிரதமர் பதவியைக் கைப்பற்றுமா? அரசியல் வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
பிரித்தானிய பொதுத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெறுமா?
ரிஷியின் பதவிக்கு ஆபத்தா என்று கேட்டால், அதற்கு வாய்ப்புள்ளது என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், லேபர் கட்சி பொதுத்தேர்தலில் அருதிப் பெரும்பான்மை பெற்று பிரதமர் பதவியைக் கைப்பற்றுமா என்றால், அந்தக் கேள்விக்கு, ஆம் என உறுதியாக பதில் கூறமுடியாது என்கிறார் தேர்தல் நிபுணரான பேராசிரியர் Michael Thrasher.
ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், ஆளும் ரிஷி கட்சி, அதாவது, கன்சர்வேட்டிவ் கட்சியால் நாட்டுக்கு பிரச்சினை என்பதைக் காட்டியுள்ளன. அதே நேரத்தில், பிரச்சினைக்குத் தீர்வு, லேபர் கட்சியின் தலைவரான Keir Starmer என்று அவை உறுதியாகக் கூறவில்லை.
காரணம், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தாலும், லேபர் கட்சி மட்டுமே வெற்றிகளைக் குவிக்கவில்லை, லேபர் கட்சி 173 இருக்கைகளை கூடுதலாகப் பெற்றாலும், கூடவே, லிபரல் டெமாக்ரட் கட்சி 101 இருக்கைகளயும், கிரீன்ஸ் கட்சி 65 இருக்கைகளையும் கூடுதலாகப் பெற்றுள்ளன. இன்னொரு விடயம், இம்முறை சுயேட்சைகளும் வெற்றிகளைக் குவித்துள்ளார்கள்.
ஆக, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் தோல்வி என்பது உண்மையாக இருந்தாலும், பொதுத்தேர்தலில் லேபர் கட்சியின் வெற்றி அப்படியே எதிரொலிக்கும் என்றோ, லேபர் கட்சி தலைவர் பிரித்தானிய பிரதமர் ஆகிவிடுவார் என்றோ உறுதியாகக் கூறமுடியாது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!