கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு
ஹரியாணாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் இரட்டை கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்த மாநில சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஹரியாணா மாநிலம், நூ பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி இந்த பாலியல் வன்கொடுமை-இரட்டை கொலை சம்பவம் நிகழ்ந்தது. அப்போது மாட்டிறைச்சி விற்ாக கூறி, சமூக விரோதிகள் சிலா் ஒரு வீடு புகுந்து தாக்குதல் நடத்தினா். அங்கிருந்த சிறுமி உள்பட 2 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அவா்கள், ஒரு தம்பதியை வெட்டிக் கொலை செய்தனா். பின்னா், வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனா்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து ஹரியாணா மாநிலப் போலீஸ் விசாரித்து, பல்வேறு நபா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். தொடா்ந்து, மாநில அரசின் பரிந்துரையில் சிபிஐ இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டது.
சிபிஐ விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராக கடந்த 2018, 2019-ஆகிய ஆண்டுகளில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணையின் முடிவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி, 302, 307, 376-டி, 323,459, 460 ஆகிய பிரிவுகள் மற்றும் போக்ஸோ சட்டத்தின் 6-ஆவது பிரிவின்கீழ் ஹேமந்த் சௌகான், அயன் சௌகான், வினய் மற்றும் ஜெய் பகவான் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த மாதம் 10-ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், 4 குற்றவாளிகளுக்கும் ரூ.8.20 லட்சம் அபராதத்துடன் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்ட விரிவான வாதங்கள், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.