உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா…காரணம் இது தான்!
உலகில் உள்ள பல நாடுகளில் லித்தியத்தை தோண்டி எடுப்பதில் சீனா (China)அதிக முயற்சி எடுப்பது மாத்திரமல்லாமல் அதிகளவு பங்குகளையும் கொள்வனவு செய்து வைத்து, வெள்ளை தங்க வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், லித்தியம் மற்றும் கோபால்ட்டை சுத்திகரிப்பதில் சீனா நீண்ட காலமாகவே முன்னணியில் இருந்து வருகிறது, அதன்படி, 2022இல் உலக விநியோகத்தில் முறையே 72% மற்றும் 68% பங்குகளை அது கொண்டிருந்தது.
இந்த வெள்ளைத்தங்க வேட்டையில் சீனா ஈடுபடுவதற்கான காரணம் மற்றும், உலகளவில் லித்தியம் காணப்படும் இடங்களில் சீனா அதிக ஆர்வம் காண்பிப்பதற்கான நோக்கம் என்பன குறித்தும் தெரியவந்துள்ளது.
மின்சார வாகனங்கள்
மின்சார வாகனங்கள் மற்றும் சூரியப்படல்களில் லித்தியம் – இரும்பு மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றது, இவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்ற முக்கியமான மூன்று தாதுபொருட்களாக கோபால்ட், நிக்கல் மற்றும் மங்கனீசு ஆகியன காணப்படுகின்றது.
லித்தியம் மற்றும் ,அந்த தாதுப்பொருட்களில் ஏதாவது ஒன்றை பிரித்தெடுக்கக் கூடிய சுரங்கங்களில், சீன நிறுவனங்களின் பங்கு உள்ளது, குறைந்தது 62 சுரங்கத் திட்டங்கள் உலகில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களில் பாதிக்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்யவும், காற்றாலை விசையாழிகள் உற்பத்தித் திறனில் 60% அளவை எட்டவும், சூரியப்படல் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் 80% அளவை எட்ட, லித்தியம், மற்றும் பிற முக்கியமான கனிமங்களைச் செம்மைப்படுத்த சீனாவின் திறன் உதவியுள்ளது.
அதன்காரணமாக இந்தத் துறையில் சீனாவின் பங்கு இந்தப் பொருட்களை மலிவானதாகவும், உலகளவில் எளிதாக கிடைக்கக் கூடியதாகவும் மாற்றியுள்ளது.
பச்சை வீட்டு வாயு
ஆனால் பசுமைப் பொருளாதாரத்திற்குத் தேவையான கனிமங்களைத் தோண்டி எடுப்பது மற்றும் பதப்படுத்துவது என்பது சீனாவுக்கானது மட்டுமல்ல. 2050ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியமாக ஆக்க வேண்டுமென்றால், அவற்றின் பயன்பாடு 2040ஆம் ஆண்டிற்குள் ஆறு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
இதற்கிடையே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சீன விநியோகங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்கியுள்ளன.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீன நிறுவனம் உலகின் பெரும்பாலான லித்தியம் இருப்புகளைக் கொண்ட அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி என்ற “லித்தியம் முக்கோணத்தில்” லித்தியம் பிரித்தெடுக்கும் திட்டத்தில் முதல் பங்குகளை வாங்கியது.
உள்ளூர் சுரங்க நடவடிக்கைகளில் இன்னும் பல சீன முதலீடுகள் தொடர்ந்தவண்ணம் இருப்பதாக சுரங்கத்துறை வெளியீடுகள், பெருநிறுவனங்கள், அரசு மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பங்குகளின் அடிப்படையில் கணக்கிட்டபோது உலகளவில் சீன நிறுவனங்கள் தற்போது கனிமத்தை உற்பத்தி செய்யும் திட்டங்களில் 33% லித்தியத்தை கட்டுப்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.
எனவே இவற்றை பிரித்தெடுக்கும் உரிமத்தை சீனா கொண்டிருப்பதால், இந்த கனிமங்கள் சார்ந்த உற்பத்தியாளர்களும், உற்பத்தி செய்கின்ற நாடுகளும் கனிமத்தை பெற்றுக்கொள்ள சீனாவிடம் தங்கியிருக்கும் நிலை தவிர்க்கமுடியாததாகிவிடும், இது உலகளவில் சீனாவை மென்மேலும் பலமடையச் செய்யும்.