சவுக்கு சங்கர் கைதுக்கு.. அரசை கடுமையாக கண்டித்த நாம் தமிழர் கட்சி சீமான்
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் கைது
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். இவர், குறிப்பாக திமுக ஆட்சியையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இவர் முன்பு, யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக தெரிகிறது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில், கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், தேனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதுமட்டுமன்றி, அவரின் நண்பர்களிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதால், அவர் மீது கஞ்சா வழக்கும் பாய்ந்தது.
சீமான் கூறியது
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் சென்னையில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், “பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசியதை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். அதனை கேட்கும் போது நமக்கே கஷ்டமாக தான் இருக்கிறது. அதனால் தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அதே நேரத்தில் அவர் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டு இருக்கிறது. கஞ்சாவை விற்பதே அரசாங்கம் தானே. இதற்கு முன்பு சாராயத்தை அரசாங்கம் விற்றது. இப்போ கஞ்சா விற்பவர்கள் யாரையும் அரசாங்கம் பிடிப்பதில்லையே ஏன்? ஏனென்றால் அதை அரசு தான் விற்கிறது” என்றார்.