;
Athirady Tamil News

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம்

0

பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ரபா(Rafah) நகரிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் படைத்துறை அறிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நகர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இஸ்ரேல் படைத்துறை மேற்கண்ட அறிவிப்பை விடுத்திருந்தது.

மக்களை வெளியேறுமாறு
அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு
உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவுடன் பைடன் அவசர பேச்சு
இதனிடையே ரபா தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம்(Benjamin Netanyahu) அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் ரபா மீதான படையெடுப்பை தாம் ஆதரிக்கவில்லை என அவர் தெளிவாக எடுத்துரைத்ததாக வோஷிங்டன் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரபா மீதான தாக்குதலுக்கான இஸ்ரேலின் திட்டம் தொடர்பில் பிரிட்டன் பிரதமர் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரிஷி சுனக் ஆழ்ந்த கவலை
இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak )கூறுகையில், “அங்கு தஞ்சம் அடைந்துள்ள குடிமக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ரபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து இங்கிலாந்து ஆழ்ந்த கவலையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் இஸ்ரேலுக்கு தனது கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், காசாவுக்குள் உதவிகளை அனுமதிக்கும் தடையை இடைநிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“பிரதமர் நெதன்யாகுவிடம் நான் மீண்டும் மீண்டும் அந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.