கனடாவில் குடிபெயர உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஆங்கில பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனடாவில் (Canada) ஒரு மாகாணத்தில் இருந்து மற்றுமொரு மாகாணத்துக்கு குடிபெயர்பவர்கள் ஐ.ஈ.எல்.டி.எஸ் (IELTS) எனப்படும் ஆங்கிலப் பரீட்சை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) ஊடாக குடிபெயர்பவர்களுக்கு மாத்திரம் குறித்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், எக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry) மூலம் விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் ஆங்கில பரீட்சைகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாகாண நியமனத் திட்டம்
கனடாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிரதேசத்திற்கு மக்கள் இடம்பெயர அனுமதிக்கும் வகையில் அந்த நாட்டு அரசாங்கத்தால் மாகாண நியமனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், அவர்கள் குடியேற விரும்பும் குறிப்பிட்ட மாகாணம் அல்லது பிரதேசத்தில் உள்ள வேலைவாய்ப்புக்களுக்கு தேவையான அனைத்து திறன்கள், பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுமைகளை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட பிரதேசம் அல்லது மாகாணம் உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரித்தவுடன், நீங்கள் அவர்களின் காலக்கெடுவிற்குள் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மொழி புலமை
மாகாண நியமனத் திட்டத்தின் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் ஆங்கில அல்லது பிரெஞ்சு மொழி புலமையைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது குறித்த சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது மாகாண நியமனத் திட்டத்தின் ஊடாக குடிபெயருபவர்கள் ஐ.ஈ.எல்.டி.எஸ் ஆங்கிலப் பரீட்சை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.