இனி அது தான் தீர்வு… ருவாண்டா திட்டம் தொடர்பில் சிரிய புகலிடக் கோரிக்கையாளர் கலக்கம்
ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படும் நெருக்கடியில் இருக்கும் சிரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், தற்கொலை தான் தீர்வு எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பூட்டிவைப்பது கொடூரம்
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தாங்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 2022 ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு வந்துள்ள அந்த நபர் தற்போது முகாம் ஒன்றில் தங்கிவருகிறார்.
பாதுகாப்பு எனக் கூறிகொண்டு பூட்டிவைப்பது கொடூரம் என தெரிவித்துள்ள அந்த நபர், முன்னர் சிரியாவில் சிறைவாசம் அனுபவித்துள்ளதாகவும், லிபியாவில் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சுனக் அரசாங்கத்தின் ருவாண்டா முடிவானது தம்மைப் போன்ற பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், சாப்பிடவோ தூங்கவோ முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ருவாண்டாவில் தாம் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பிரித்தானிய அரசாங்கம் தம்மை ருவாண்டாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பினால், அங்கு தரையிறங்கிய நாள் தாம் தற்கொலை செய்துகொள்வது உறுதி என்றார்.
இன்னும் 9 முதல் 11 மாதங்களில்
2023 பிப்ரவரி மாதம் ருவாண்டா திட்டம் குறித்து தெரிந்துகொண்ட பின்னர், ஒருவித அச்சத்தில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அந்த நபர்களில் குறைந்தது ஒருவர் ருவாண்டா திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் செய்தனர். இதனிடையே, ரிஷி சுனக் அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்னும் 9 முதல் 11 மாதங்களில் முதல் குழுவினர் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.