யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு – மகன் காவல்துறையினரால் கைது
புதிய இணைப்பு
யாழ். தெல்லிப்பழையில் (Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்
சந்தேகநபரான மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதோடு போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (04.5.2024) கனடி ஜஸ்மின் என்ற 37 வயது குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த மரணம் தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
உடற்கூற்றுப் பரிசோதனை
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? எனக் கண்டறியும் நோக்குடன் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகன் காணாமல்போயுள்ளார். அவரைப் பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.
கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர்
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், ‘மொபைல் கேம்ஸ்’ எனப்படும் கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், 16 வயதுடைய மேற்படி சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம்.
ஏனெனில் அவரது அறையில் சில சந்தேகத்திற்கிடமான வாசகங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன என பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.