தாதியர்களுக்கான ஓய்வு வயதில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சரவையில் கோரிக்கை
இலங்கையி்ல் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 61ஆக நீடிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (07.05.2024) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ தாதியர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 வரை நீடிக்க சம்மதித்தோம்.
மேலும், இது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்.
புதிய நியமனங்கள்
குறித்த வயது நீடிப்பானது 61 ஆண்டுகளை தாண்டியதல்ல.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக நீதித்துறை கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது.
மேலும், 3,000 தாதியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சைகளும் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, விரைவில் தாதியர் சேவைக்கு அவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேவேளை, தற்போது தாதியர் சேவையில் 45,000 பேர் உள்ளதுடன் இன்னும் சுமார் 1,000 வெற்றிடங்கள் இருக்கின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.