மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய தகவல்
ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன என்பதைத் தெரிந்தவர்கள், இந்த காலகட்டத்தில் ஓரளவு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன?
ஆன்டிபயாட்டிக் என்பது, பாக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்து ஆகும். இந்த ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகள், பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளை கொல்வதன் மூலமோ, அல்லது, அவற்றை அதிகரிக்க விடாமல் தடுப்பதன் மூலமோ, நோய்களைக் குணமாக்கும் ஒருவகை மருந்துகள் ஆகும்.
ஆனால், இந்த ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகளில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, நம் உடலில், உடலுக்குள்ளும், உடலுக்கு வெளியேயும், அதாவது, தோலின் மீதும், ஏராளம் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. குறிப்பிட்ட நோய்க்காக ஒருவர் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்தை உட்கொள்ளும்போது, அந்த மருந்து குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் பாக்டீரியாவைக் கொல்வதுடன், மனித உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களையும் கொன்றுவிடுகிறது.
ஆக, இப்படி அடிக்கடி ஆன்டிபயாட்டிக் தாக்குதல் ஏற்படுவதால், அதாவது, மனிதர்கள் அடிக்கடி ஆன்டிபயாட்டிக்குகளை சாப்பிடுவதால், வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகள், காலப்போக்கில், அந்த ஆன்டிபயாட்டிக்கையே எதிர்த்து தாக்குப்பிடித்து வாழும் திறனை வளர்த்துக்கொள்கின்றன. அந்த தாக்குப்பிடிக்கும் திறன் drug-resistant என அழைக்கப்படுகிறது.
பிரச்சினை என்னவென்றால், இந்த drug-resistant பாக்டீரியாவில் ஒன்று, மனிதர்களுக்கு ஏதாவது ஒரு நோயை உண்டுபண்ணுமானால், அதற்கு மருந்தே கிடையாது என்னும் நிலை ஏற்பட்டுவிடும். ஏனென்றால், மருந்து கொடுத்தாலும் அந்த பாக்டீரியா சாகாது, அதை எதிர்த்து தாக்குப்பிடித்து வாழும், தொடர்ந்து நோயை அதிகரித்துக்கொண்டே இருக்கும். விளைவு? நோயாளியின் நிலைமையில் முன்னேற்றம் இருக்காது. மரணம் ஏற்படும் நிலை உருவாகும்.
சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் Münchenstein என்னுமிடத்தைச் சேர்ந்த Nora Artico என்னும் 19 வயது பள்ளி மாணவி, இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, நுண்ணுயிர்களில், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என பலவகை உள்ளன. அவற்றில் ஒன்று Bacteriophage என்னும் ஒருவகை வைரஸ். இந்த Bacteriophage என்னும் வைரஸ், பாக்டீரியாக்களையே கொல்லக்கூடியதாகும்.
ஆக, சில குறிப்பிட்ட Bacteriophage என்னும் வைரஸ்களைத் தேர்ந்தெடுத்து, அதை, பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நோயாளிகள் உடலில் செலுத்தும்போது, அந்த Bacteriophage, அந்த நோய்க்கிருமியைக் கொன்றுவிடும். முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த நோயாளிக்கு சிகிச்சைக்காக ஆன்டிபயாட்டிக்குகளைக் கொடுத்தால், அந்த ஆன்டிபயாட்டிக்குகள், அந்த நோய்க்கிருமியைக் கொல்வதுடன் கூடவே அந்த நோயாளியின் உடலிலுள்ள நல்ல நுண்ணுயிர்களையும் கொன்றுவிடும்.
ஆனால், இந்த Bacteriophage வைரஸோ, நல்ல நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. கெட்ட கிருமிகளை மட்டுமே கொல்லும்.
Nora Artico என்னும் அந்த பள்ளி மாணவி, தற்போது, சிகிச்சைக்குப் பயன்படும், அத்தகைய ஐந்து Bacteriophage வைரஸ்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆகவே, அவருக்கு, Swiss Youth Research மற்றும் European Union Contest for Young Scientists என்னும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.