;
Athirady Tamil News

நிரந்தரமாக துண்டிக்கப்படப்போகும் மின் விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை

0

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(kanchana wijesekera) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க(Kevindu Kumaratunga) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்கட்டணத்தை குறைக்க பேச்சுவார்த்தை
2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.பல மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டன.ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம்
சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவை கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும்.

கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும்
மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை. கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல,காலம் காலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு,கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அந்த காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும். மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.