800 கிலோ தங்கத்துடன் நடுவீதியில் கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு
தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற வானே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வளைவொன்றில் குறித்த வான் திரும்பியபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாரதி மற்றும் தனியார் பாதுகாவலர் இருவரும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்
விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தோடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் வானில் இந்திய மதிப்பில் ரூ.666 கோடி மதிப்பிலான 800 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வானை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் அதை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
நகைகள் அனைத்தும் மற்றொரு வாகனத்தில்
இதைத் தொடர்ந்து, வணிக வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகைகளுக்கான பில்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அனைத்து நகைகளுக்கும் பில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, நகைகள் அனைத்தும் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் ஏற்றப்பட்டு சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.