மாதவிடாய் வலிக்காக மாத்திரை சாப்பிட்ட பெண்: மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பிய பயங்கரம்
மாதவிடாயின்போது ஏற்பட்ட வயிற்று வலியைக் கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிட்ட ஒரு பெண், 17 நாட்கள் கோமாவில் வைக்கப்பட்ட நிலையில், தன் கண் பார்வையைக் காப்பாற்றிக்கொள்ள போராடி வருவதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மாதவிடாய் வலிக்காக மாத்திரை சாப்பிட்ட பெண்
பிரேசில் நாட்டவரான ஜாக்குலின் (Jaqueline Gmack, 31), மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்துவதற்காக ibuprofen என்னும் மாத்திரையை எடுத்துக்கொண்டுள்ளார். சில நாட்களில் அவரது கண்களில் ஊறல் ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, வாய்க்குள் கொப்புளம் ஏற்பட்டு, அதிலிருந்து இரத்தம் வரத்துவங்க, பிறகு, முகம் முழுவதும் கொப்புளங்கள் பரவ, ஜாக்குலினால் சரியாக பார்க்க முடியாமல் போயுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் ஜாக்குலின். அதற்குப் பிற்கு 17 நாட்களுக்குப் பிறகே அவர் தனக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொண்டிருக்கிறார். ஆம், அவரது உடல் நிலை மோசமானதால், மருத்துவர்கள் அவரை 17 நாட்களுக்கு கோமா நிலையில் வைத்திருந்திருக்கிறார்கள்.
அவருக்கு என்ன ஆனது?
ஜாக்குலினுக்கு ஏற்பட்டது, Stevens-Johnson Syndrome என்னும் அபூர்வ பிரச்சினை ஆகும். சில மருந்துகள், குறிப்பான ஆன்டிபயாட்டிக்குகள், வலிப்பு நோய்க்கான மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளுக்கு, உடல் அதீத எதிர்வினையாக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. சில நேரங்களில், இந்த பிரச்சினையால் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதாவது, உடலே உடலுக்கு எதிராக செயல்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறதாம். ஜாக்குலின் விடயத்தில் அவரது தோலுக்கு எதிராக அவரது உடல் செயல்பட்டுள்ளது.
17 நாட்களுக்குப் பின் கண் விழித்த ஜாக்குலின், தன் உடல் முழுவதும் பேண்டேஜ் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது உடல் முழுவதும் வடுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவரது கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜாக்குலின் உயிர் பிழைத்ததே ஒரு அற்புதம்தான் என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள். அவரது பெற்றோர் பல நாட்கள் அவரை கண்ணாடி பார்க்கவே அனுமதிக்கவில்லையாம். பின்னர் ஒருநாள் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது, தன்னை தனக்கே அடையாளம் தெரியவில்லை என்கிறார் ஜாக்குலின்.
இதற்கிடையில், ஜாக்குலினின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது கண்களில் உட்பட மொத்தம் 24 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. என்றாலும், 40 சதவிகித பார்வை மட்டுமே திரும்பியுள்ளதாக தெரிவிக்கிறார் ஜாக்குலின். ஆக, மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலிக்காக வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ளும் பெண்கள் யோசித்து செயல்படுவது நல்லது.