ரஷ்யாவில் 3 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்… பயிர்கள் கடும் சேதம்
ரஷ்யாவில் அதிக தானியங்கள் விளையும் மூன்று பிரதான பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
உறைபனி காரணமாக பயிற்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டுக்கான விளைச்சல் மிகவும் சரிவடையலாம் என்றும் கூறப்படுகிறது.
உறைபனி காரணமாக Lipetsk, Voronezh மற்றும் Tambov ஆகிய மூன்று பிராந்தியங்களுமே தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, Lipetsk பிராந்திய ஆளுநர் தெரிவிக்கையில்,
மே மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்த ஆண்டு அறுவடை முந்தையதை விட மிகவும் குறைவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Voronezh பிராந்திய வேளாண் அமைச்சர் தெரிவிக்கையில், பனிப்பொழிவால் 265,000 ஹெக்டேர் அளவுக்கும் அதிகமான விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பகுதிகளும் ரஷ்யாவின் வளமான பிளாக் எர்த் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். தானிய உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகின் முதன்மையான நாடுகளில் ஒன்று ரஷ்யா.
தகுதியுடையவர்கள்
தானியங்கள் மட்டுமின்றி, தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பகுதிகளிலும் உருளைக்கிழங்கு, சூரியகாந்தி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் பழம் போன்றவை பயிரிடப்படுகின்றன.
ஆனால் இந்தப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தகவல் இல்லை. அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பிராந்திய வேளாண் மக்களும் மானியங்களைப் பெறுவதற்கும், காப்பீட்டுத் தொகைகளுக்கு விண்ணப்பிக்கவும் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2023ல் 144.9 மில்லியன் டன்னாக இருந்த தானிய அறுவடை 2024ல் 132 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறையக்கூடும் என்று ஏப்ரல் நடுப்பகுதியில் வேளாண் அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.