இந்தியா செல்லவுள்ள மாலைதீவு அதிபர்!
மாலைதீவு (Maldives) அதிபர் முகமது முய்சு (Mohamed Muizzu) இந்தியாவுக்கு (India) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முகமது முய்சுவின் இந்த பயணத்துக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவும் அவரது பயணத்துக்கு ஏற்ற சூழலை அமைப்பதற்காகவும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் (Moosa Zameer) தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார்.
முகமது முய்சுவின் இந்திய பயணத்தை விரைவில் மேற்கொள்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் (S. Jaishankar) கலந்துரையாடப்பட்டதாக மூஸா சமீர் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஒப்பந்தம்
இந்த சந்திப்பின் போது, சீனாவுடன் (China) மாலைதீவுக்கு எந்தவொரு இராணுவ ஒப்பந்தமும் இல்லை என்பது தொடர்பில் தான் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக மூஸா சமீர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாலைதீவு அதிபர் இதனை உறுதியாக தெரிவித்துள்ளதாகவும் எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் மாலைதீவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையில் முறுகல் நிலை காணப்படும் நிலையில், முகமது முய்சு இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளமை உலகளவில் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.