இந்தியாவின் டெல்லி முதல்வருக்கு இடைக்கால பிணை
மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று (10.05.2024) விசாரணைக்காக எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிணை 2024 ஜூன் 1 வரை நடைமுறையில் இருக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடுமையான நிபந்தனை
விசாரணையின் போது, கெஜ்ரிவால் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ஜூன் 5 வரை இடைக்கால பிணையை கோரியபோதும், அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்தநிலையில் இடைக்கால பிணை வழங்க வேண்டும் என்றால், கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று மன்றாடியார் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால், பொதுவில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் கைது செய்து இதுவரை காலமும் விசாரணை செய்து வரும், அமுலாக்க இயக்குனரகம் இன்று கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
எனினும் அதனை நீதியரசர்கள் அமர்வு ஏற்கவில்லை.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .