மதுபான பாவனையில் வீழ்ச்சி ; மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவிப்பு
கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுபான பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுபான பாவனை 65 சதவீதம் வீழ்ச்சி
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி, இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்ட காலங்களில் மதுபான பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுபான பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுபான பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.
புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுபான பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுபானத்தின் விலை அதிகரிப்பே காரணம் என, ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.