சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்
பலாங்கொடை – வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
பலாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்த் திசையில் பயணித்த இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தின் போது லொறியில் இருந்த சில இரும்புக் கம்பிகள் பேருந்திற்குள் வீசப்பட்ட நிலையில், பேருந்திற்குள் இருந்த மாணவி ஒருவரின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லொறியின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.