கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட செயலமர்வு
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று(13) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் பணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே, தேசிய ஐனநாயக நிறுவனத்தின் ஆலோசகர் சியாமா சல்காது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்(காணி ) இ. நளாயினி, உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் , பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், மாற்றுவலுவுள்ளோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.