ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து காவல்துறை தென்மண்டல ஐஜி கண்ணன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவே 9 மணிக்கே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாருடன் மரண வாக்குமூலம் மற்றும் குடும்பத்துக்காக எழுதிய இரண்டு கடிதங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரண வாக்குமூலம் கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், சிலருடன் பணப்பரிவர்த்தை பிரச்னை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கு மரணம் நேர்ந்தால், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களில் யாரேனும் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த நாள் 4-ஆம் தேதி காலை அவரின் வீட்டுக்கு பின்புள்ள தோட்டத்தில் அவரின் சடலம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சந்தேக மரணம் என்று வழக்கை மாற்றி விசாரணை நடத்தி வருகின்றோம்.
அவரின் உடலை உடற்கூறாய்வு செய்யும்போது, உடல் முழுமையாக எரிந்திருந்தது. முதுகு மற்றும் பின்னங்கால் பகுதிகள் எரியாமல் இருந்தது. கால் மற்றும் உடலில் கம்பி கட்டப்பட்டிருந்தது. அவரின் உடலில் முன்பகுதியில் கல் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் கழுவும் நார் அவரது வாயில் இருந்தது. இதுதான் எங்களுக்கு கிடைத்தது.
இந்த விசாரணைக்கு 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வின் முழு அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தடவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், சைபர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் விசாரணை முழுமையடையவில்லை. டிஎன்ஏ போன்ற மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளியாகவில்லை.
இன்னும் சந்தேக மரணம் என்ற வகையில்தான் வழக்கின் நிலை உள்ளது. நிறைய விஷயங்களில் தெளிவு கிடைக்க வேண்டியது உள்ளது. அறிவியல் பூர்வ முடிவுகள் வெளியான பிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2-ஆம் தேதி திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் இரவு 10 மணிக்கு ஜெயக்குமார் டாா்ச்லைட் வாங்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த டாா்ச் லைட் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், சடலம் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டா் தொலைவில் பெட்ரோல் வாங்கிய 2 லிட்டா் பாட்டில்களும் சிக்கின. அவற்றில் உள்ள கைரேகையையும் தடவியல் நிபுணா்கள் ஆய்வுக்குள்படுத்தியுள்ளனா்.
மேலும், இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.