பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
தொழில் துறையை அழிக்கும் செயல்
இதன் காரணமாக பிரித்தானியாவின் நுண்கலைத் தொழில்களில் திறமையானவர்களின் பங்களிப்பு இல்லாமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச மாணவர்கள் கல்வி முடித்து 3 ஆண்டுகள் வேலை செய்யலாம் என்ற சிறப்பு வீசாவானது ரத்து செய்யப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த நிலை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வியை முடித்து 3 ஆண்டுகள் வரையில் பிரித்தானியாவில் பணியாற்றும் வாய்ப்பை மாணவர்களுக்கு நிராகரிப்பது என்பது, ஆண்டுக்கு 108 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தொழில் துறையை அழிக்கும் செயல் என அந்நாட்டு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
மேலும், மாணவர்கள் சேர்க்கை சரிவு இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே வெளிநாட்டு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க மறுப்பதன் பின்னணியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
மொத்தமுள்ள பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், 10இல் 9 பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை சரிவடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 27 சதவிகிதம் சரிவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சந்தித்துள்ளது. இந்த நிலையில் பட்டதாரிகளுக்கான வீசா தொடர்பில் ரத்து செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் திட்டங்களை நிராகரிக்குமாறு முக்கிய அமைப்புகள் ஒன்றாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.