சகோதரியை முதலையிடமிருந்து காப்பாற்றப் போராடிய பிரித்தானிய இளம்பெண்: கிடைத்துள்ள இன்ப அதிர்ச்சி
இரட்டையர்களான பிரித்தானிய சகோதரிகள் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒரு இளம்பெண்ணை முதலைக் கவ்வி இழுத்துச் செல்ல, அவரது சகோதரி முதலையுடன் போராடி தன் சகோதரியை மீட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற முதலை
பிரித்தானியாவின் Berkshireஐச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான ஜார்ஜியாவும், மெலிஸ்ஸாவும் (Georgia Laurie, Melissa, 31), 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
Puerto Escondido என்னுமிடத்திலுள்ள காயலில் இருவரும் நீந்திக்கொண்டிருக்கும்போது, திடீரென மெலிஸ்ஸாவை ஒரு முதலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
சகோதரியை முதலை இழுத்துச் செல்வதைக் கண்ட ஜார்ஜியா கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக அந்த முதலையைத் தாக்கத் துவங்கியுள்ளார். ஜார்ஜியாவின் அடியைத் தாங்காமல், முதலை மெலிஸ்ஸாவை விட்டு விட்டு சென்றுள்ளது. மெலிஸ்ஸாவின் மணிக்கட்டு, வயிறு, கால்கள் மற்றும் பாதங்களிலும், ஜார்ஜியாவின் கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டார்கள்.
கௌரவிக்கவிருக்கும் பிரித்தானிய மன்னர்
இந்நிலையில், ஜார்ஜியாவுக்கு அரண்மனையிலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், முதலையுடன் போராடி சகோதரியைக் காப்பாற்றிய ஜார்ஜியாவுக்கு, வீரதீரச் செயல்களுக்கான, மன்னருடைய Gallantry Medal என்னும் கௌரவம் அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்க, இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் சகோதரிகள்.