புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள்… முதல் முறையாக மனம் திறந்த சார்லஸ் மன்னர்
புற்றுநோய் சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் குறித்து மன்னர் சார்லஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
மருத்துவர்கள் அனுமதி
கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் சார்லஸ் மன்னர் வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து சிகிச்சையை முன்னெடுத்துவரும் அவருக்கு தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் சிகிச்சை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அருங்காட்சியகம் ஒன்றில் விஜயம் செய்த மன்னர் சார்லஸ் தாம் மேற்கொள்ளும் சிகிச்சை குறித்தும் அதன் பக்க விளைவுகள் தொடர்பில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், சுவை அறியும் உணர்வை தாம் இழந்துள்ளதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரித்தானிய ராணுவ அதிகாரியான Aaron Mapplebeck என்பவருடன் பேசும்போதே, சார்லஸ் மன்னர் சிகிச்சையின் பக்க விளைவுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
பக்க விளைவாக இருக்கலாம்
சுவை அறியும் உணர்வுகளை இழந்தது, சிகிச்சையின் பக்க விளைவாக இருக்கலாம் என்றே சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை அவரது சிகிச்சை விவரங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அத்துடன் அரண்மனை நிர்வாகமும், இதுவரை மன்னருக்கு எந்த வகை புற்றுநோய் என்பது குறித்தும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.