;
Athirady Tamil News

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

0

புது தில்லி: போலி தொலைபேசி அழைப்புகள் தொடா்பாக மத்திய தொலைத் தொடா்புத் துறை(டிஒடி) அமைச்சகம் மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தங்கள் கைபேசி எண் துண்டிக்கப்பட இருக்கிறது எனக் கூறி வரும் அழைப்புகள் போலியானவை எனவும் இது குறித்து அச்சமடையவேண்டாம் என இந்த எச்சரிக்கையில் டிஒடி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமும் காவல் துறையினா், சிபிஐ, ஆா்பிஐ போன்ற அதிகாரிகள் பெயரால் ஆள்மாறாட்ட இணைய குற்றவாளிகள் பெருமளவில் ‘பிளாக்மெயில்’ செய்து வருவதாகவும் கூறி பொதுமக்களை உஷாா்படுத்தியுள்ளது.

இது குறித்து டிஒடி கூறியிருப்பது வருமாறு:

பொதுமக்களுக்கு ஏராளமாக ’தங்கள் கைபேசி எண் துண்டிக்கப்படும்’ என போலி அழைப்புகள் வருகின்றன. இது குறித்து அச்சம் அடைய தேவையில்லை. இப்படி வரும் போலி அழைப்புகள் தொடா்பாக தொலைத் தொடா்புத்துறை இணைய தளத்தில் புகாரளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வாட்ஸ் ஆஃப் அழைப்புகள் மூலம் வெளிநாட்டு எண்களிலிருந்து அழைப்புகள் வரும். இவா்கள் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்ற முயற்சிக்கின்றனா்.

இதுபோன்ற அழைப்புகள் மூலம் (இணையதள) குற்றவாளிகள் இணையதளக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளை செய்ய திட்டமிடுகின்றனா். மோசடிகள் புரிய தனிப்பட்ட தகவல்களை அச்சுறுத்தி பெற முயற்சிக்கலாம். இது போன்ற அழைப்புகளைச் மேற்கொள்ள டிஒடி, டிராய் (தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம்) சாா்பில் யாருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்புகள் தொடா்பான தகவல்களை தொலைதொடா்பு இணையதளத்தில் புகாரளிக்க வேண்டும்.

இத்தகையா விழிப்புணா்வின்றி இணையதளக் குற்றங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடா்பான புகாா்களையும் உடனடியாக தெரிவிக்கவேண்டும். 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது இணையதளத்திலும் என்ற தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சமும் இது போன்ற விவகாரங்கள் குறித்தும் பொதுமக்களை உஷாா் படுத்தியுள்ளது. அது வருமாறு:

மாநில காவல்துறை, சிபிஐ, போதைப்பொருள் துறை, இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ), அமலாக்க இயக்குநரகம்(இடி) உள்ளிட்ட புலனாய்வு முகமைகளின் அதிகாரிகளை போல வேடமிட்டு, மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற இணைய குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து ஏராளமான புகாா்கள் பதிவாகி வருகிறது.

இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவா்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவரை அழைத்து, ‘ ’தாங்கள்’ சட்டவிரோத பொருட்கள், மருந்துகள், போலி பாஸ்போா்ட் பாா்சலை அனுப்பியுள்ளீா்கள்‘ என்று கூறி மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனா். இத்தகைய மோசடி குற்றவாளிகள், ஸ்கைப் அல்லது பிற இணைய வழி காணொலி தளத்தில் தொடா்பு கொள்வதோடு, காவல் நிலையங்கள், புலனாய்வு அரசு அலுவலகங்களின் மாதிரியாகக் கொண்ட ஸ்டுடியோக்களைப் பயன்படுத்துகின்றனா், உண்மையான தோற்றத்திற்காக சீருடைகளை அணிந்து வருகின்றனா்.

இத்தகைய குற்றவாளிகளால் நாடு முழுவதும், பலா் பாதிக்கப்பட்டு பெரும் தொகையை இழந்துள்ளனா். இந்த இணைய குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசின் துறைகள் இணைந்து இந்திய சைபா் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இது போன்ற இணைய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளை கண்டறியப்பட்டுள்ளது. மோசடி செய்தவா்களின் சிம் காா்டுகள், கைப்பேசி சாதனங்கள், மியூல் கணக்குகள் போன்றவைகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த வகையான மோசடிகள் குறித்து விழிப்புணா்வை பரப்பவும் முன்வரவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

’மியூல் கணக்கு’ என்பது ‘ஸ்மா்ஃபா்‘ என்று அழைக்கப்படுகிறது. திருட்டு அல்லது மோசடிகளில் சட்டவிரோதமாக வாங்கிய பணத்தை மாற்றும் வழியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.