கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(15) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கடந்த சித்திரை மாதத்திற்கான குறித்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இன்றைய கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரத்துக்கு வழங்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு அனுமதி வழங்கல், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை முன்வைத்தல் ஆகியவற்றுடன், பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
மேலும், கடந்த 27.03.2024ம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
இவற்றைவிட சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாவட்ட குடிநீர் பிரச்சினை, காணி உரித்து வழங்கும் நிகழ்ச்சித் திட்டம், சூரியகல வீட்டுத் திட்டம், இலவச அரிசி விநியோக திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(திட்டமிடல்), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.