வீடொன்றிற்கு மாத வாடகை 21 லட்ச ரூபாயா? கொந்தளிக்கும் சுவிஸ் மாகாணமொன்றின் மக்கள்
சுவிஸ் மாகாணமொன்றில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின்முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த சம்பவம் நினைவிருக்கலாம். தற்போது, வீட்டு வாடகை எக்கச்சக்கமாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வீடொன்றிற்கு மாத வாடகை 21 லட்ச ரூபாயா?
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், Wiedikon நகரத்தில் சூரிச் காப்பீட்டு நிறுவனம் 270 புதிய வீடுகளைக் கட்டியுள்ளது.
விடயம் என்னவென்றால், 5 அறைகள் கொண்ட வீடுகளுக்கு வாடகை, மாதம் ஒன்றிற்கு 6,400 சுவிஸ் ஃப்ராங்குகள். அதாவது, இலங்கை மதிப்பில் 21,26,457.08 ரூபாய். சுமார் 3 அறைகள் கொண்ட வீட்டின் வாடகை, 3,400 சுவிஸ் ஃப்ராங்குகள். அதாவது, 11,29,911.56 ரூபாய்.
கொந்தளிக்கும் மக்கள்
இந்த தகவலறிந்து உள்ளூர் மக்கள் கொந்தளிக்கிறார்கள். இவ்வளவு வாடகை எப்படி கொடுக்க முடியும் என்றும், இது சாதாரண மக்களை இத்தகைய வீடுகளில் குடியிருக்க விடாமல் செய்வதற்கான நடவடிக்கை என்றும் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் மக்கள்.
நகரங்கள் பெரும் வளர்ச்சியை சந்தித்துவரும் நிலையில், வீடு தட்டுப்பாட்டை பயன்படுத்திக்கொண்டு சிலர் இப்படி வாடகையை எக்கச்சக்கமாக அதிகரித்துவருவதாக கூறும் வாடகை வீடுகளில் வசிப்போர் கூட்டமைப்பு, வாடகையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தலையிடவேண்டும் என கோரியுள்ளது.