;
Athirady Tamil News

யாழில். 17 இலட்ச ரூபாய் ஆலய நிதி மோசடி – தலைவர் தலைமறைவு

0

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் நிர்வாக சபை தலைவர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 17 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆலய தலைவர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொதுக்கோயில் ஒன்றின் நிர்வாக சபை தலைவராக இருந்த நபர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகஸ்தரின் பதவி முத்திரை போன்று போலியான முத்திரை தயாரித்து , அவரது கையொபத்தினையும் போலியாக வைத்து , ஆலய வங்கி கணக்கில் இருந்து கடந்த ஆண்டு ஐப்பசி மாதமளவில் 10 இலட்ச ரூபாயும் , கடந்த ஜனவரி மாதமளவில் 07 இலட்ச ரூபாயும் மோசடியாக பெற்றுள்ளார்.

பின்னர் வங்கியில் தான் மோசடியாக பெற்ற பணத்தினை மீள செலுத்தியும் உள்ளார்.

இந்நிலையில் தலைவர் மோசடியாக பணம் பெற்ற சம்பவம் தொடர்பில் அறிந்த, ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒரு தரப்பினர், இது தொடர்பில் பிரதேச செயலகத்திடம் முறையிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து பிரதேச செயலகம் அது தொடர்பில் விசாரணைகள் நடத்திய போதே, கலாச்சர உத்தியோகஸ்தரின் போலி முத்திரையை பயன்படுத்தியுள்ளமை மற்றும் போலி கையொப்பம் வைத்தமை தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து பிரதேச செயலகத்தினரால் , காங்கேசன்துறை பிராந்திய பெருநிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தலைவர் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேவேளை ஆலய நிர்வாகத்திற்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் நிலவி வருவதாகவும் , அது தொடர்பில் யாழ். நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையம் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.