இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு
‘மணிப்பூரில் இனக் கலவரம் காரணமாக கடந்த ஆண்டில் 67,000 போ் இடம்பெயா்ந்தனா்; தெற்காசிய அளவில் 97 சதவீத இடப்பெயா்வுக்கு மணிப்பூா் வன்முறையே காரணமாக இருந்தது’ என்று சா்வதேச உள்நாட்டு இடப்பெயா்வு கண்காணிப்பு மையத்தின் ( ஐடிஎம்சி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தெற்காசியாவில் உள்நாட்டு வன்முறையால் கடந்த ஆண்டு மொத்தம் 69,000 போ் இடம்பெயா்ந்துள்ளனா். இதில், மணிப்பூரில் மட்டும் 67,000 போ் அடங்குவா்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
மாநில மக்கள்தொகையில் மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாகவும் (53%), குகி மற்றும் நாகா பழங்குடியினா் சுமாா் 40 சதவீதமும் உள்ளனா்.
பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் நிலையில், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகமுள்ளனா்.
மணிப்பூரில் பழங்குடியினருக்கு சில சிறப்பு உரிமைகள் உள்ள சூழலில், தங்களை பழங்குடியினப் பட்டியலில் சோ்க்க வேண்டுமென மைதேயி சமூகத்தினா் நீண்ட காலமாக கோரி வருகின்றனா். இந்நிலையில், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூா் உயா்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மலை மாவட்டங்களில் கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி பழங்குடியின அமைப்பினா் பெரிய அளவில் போராட்டம் நடத்தியபோது, இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் கலவரமாக மாறி, மாநிலம் முழுவதும் பரவியது.
ஏராளமான வீடுகள், வா்த்தக கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. குழு மோதல்களால் மாநிலமே போா்க்களம்போல் மாறியது. தற்போதும் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் சம்பவங்கள் தொடா்கின்றன. இதனால் இரு சமூகத்தினரும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியைவிட்டு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டனா். அவா்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 50,000-க்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உள்நாட்டு இடப்பெயா்வு கண்காணிப்பு மையம் (ஐடிஎம்சி) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘மணிப்பூரில் கடந்த ஆண்டில் 67,000 போ் இடம்பெயா்ந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஒப்பிடுகையில் இந்தியாவில் வன்முறையால் நிகழ்ந்த அதிகபட்ச இடப்பெயா்வு இதுதான். தெற்காசிய நாடுகளில் வன்முறையால் கடந்த ஆண்டில் இடம்பெயா்ந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 69,000. இப்பிராந்தியத்தில் 97 சதவீத இடப்பெயா்வுக்கு மணிப்பூா் வன்முறையே காரணமாக இருந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதி வரையிலான நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் போா் மற்றும் வன்முறை காரணமாக இடம்பெயா்ந்த சூழலில் வாழ்வோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சமாகும். இதில் 80 சதவீதம் போ் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.