;
Athirady Tamil News

300 பேருக்கு சிஏஏ சட்டம் மூலம் இந்திய குடியுரிமை வழங்கிய மத்திய அரசு

0

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதச் சிறுபான்மையினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நாடுகளில் இந்துகள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமண மற்றும் புத்த மதத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர். இவர்கள் அந்நாடுகளில் மத ரீதியிலான பல துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பல காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் அம்மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தம் செய்யப்பட்டு, சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இணைக்கவில்லை என கூறி இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிரான குரல்களும் ஒலித்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சிஏஏவுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி, சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமலுக்கு வந்தது. 2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவில் குடியேறியவர்கள் விண்ணப்பித்து இந்திய குடியுரிமை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பேரில் மத்திய அரசிடம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் சுமார் 300 பேருக்கு முதற்கட்டமாக இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார். இந்திய குடியுரிமைக்கான ஆணைகளை பெற்றவர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் பலருக்கு மின்னஞ்சல் மூலமாக குடியுரிமை ஆணைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய குடியுரிமைக்காக காத்திருந்த பலர் தங்களது கனவு நிறைவேறியுள்ளது கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.