நியமனங்களை பெற்றுத்தர ஆவன செய்யுங்கள் – உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி துறையின் 12 ஆவது அணியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம் (16.05.2024) வருகைதந்த குறித்த கற்கைநெறியாளர்கள் தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தி கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போதே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் – தாம் உடற்கல்வி துறையில் ஒவ்வொரு துறை சார் விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்போது யாழ் மாவட்டத்தில் பல பாடசாலைகளில் உடற்கல்வி துறை துரிதமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் அதற்கான ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்கள் போதியளவு இன்மை காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த வெற்றிடங்களுக்கு தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கற்கையாளர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் வரும் வாரம் யாழ்ப்பாணத்தித்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் அவ்விடையம் குறித்து அவரிடம் நேரில் பிரஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியிருந்ததுடன் நிரந்தர நியமனங்கள் கிடைக்கும்வரை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளது மாணவர்களின் விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்கு தன்னார்வ ரீதியில் பங்களிப்பு செய்து உங்கள் திறமையுடன் மாணவர்களின் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.