கனடாவில் பாரிய காட்டுத்தீ: வெளியேற்றப்பட்ட 6000 பொதுமக்கள்
கனடாவின் (Canada) மேற்கு மாகாணமான அல்பெர்டாவில் நேற்று முன் தினம் (15) திடீரென காட்டுத்தீ பரவியதால் 6000 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் அதிகமாக காற்று வீசிய காரணத்தால் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ வேகமாக பரவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள காப்புக்காடுகளில் பரவி இருந்த தீயை அணைக்க போராடினர்.
6000 பேர் வெளியேற்றம்
இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பீகன் ஹில், அபசன்ட், பிரேரி கிரீக் உள்ளிட்ட நகரில் வாழ்ந்து வரும் 6 ஆயிரம் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனால் அங்குள்ள வீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வெளியேறியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிலர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.