மக்கள் தெருக்களில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வர ஜேர்மனி திட்டம்: திட்டத்திலுள்ள நடைமுறைப் பிரச்சினைகள்
மக்கள் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழ்வதை முடிவுக்குக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால், அதில் நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன என்கிறார்கள், வீடற்றவர்களும், அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களும்.
மக்கள் தெருக்களில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வர திட்டம்
2030ஆம் ஆண்டுக்குள், மக்கள் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழும் நிலையை முடிவுக்குக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், வீடில்லாமல் தெருவோரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஜேர்மனியில் எத்தனை பேர் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழ்கிறார்கள் என்னும் சரியான எண்ணிக்கை யாரிடமும் இல்லை. ஜேர்மன் அரசு சுமார் 375,000 பேர் வீடில்லாமல் இருப்பதாகக் கூற, பெடரல் அமைப்பொன்றோ, 600,000 பேர் வீடில்லாமல் இருப்பதாகவும் அவர்களில் சுமார் 50,000 பேர் தெருவோரமாக வாழ்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
திட்டத்திலுள்ள பிரச்சினைகள்
அதாவது, அரசு வீடில்லாமையை ஒழிக்க திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது. ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது யாருக்கும் தெரியவில்லை. காரணம், எப்படி அத்தனை பேருக்கான வாழுமிடங்களை உருவாக்குவது என்பது தெரியவில்லை.
2022இலிருந்து 2027க்குள் வீடற்றோருக்காக வீடுகளைக் கட்ட ஒரு திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆண்டொன்றிற்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படவேண்டும் என இலக்கு நிணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டில், 22,545 வீடுகளை மட்டுமே கட்ட முடிந்தது. அப்படியானால், இத்தனை பேர் வாழ்வதற்கான வீடுகளை எப்படி, எப்போது கட்டி முடிப்பது. ஆக, இந்த திட்டத்தைப் பொருத்தவரை, இப்போதைக்கு அது ஒரு அறிவிப்பு மட்டுமே என்கிறார்கள் வீடற்றவர்களும், அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களும்.