;
Athirady Tamil News

கழிவுநீர் கலப்பு… மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

0

கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது.

மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் கலக்கிறது. மேலும் இந்த ஆற்றின் பாதையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி இருப்பதால் கோடைக் காலத்திலும் நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது. மேலும் இந்த நீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குரும்பபாளையம் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மதுக்கரை அருகே செல்லும் ஆற்றுப் பாதை பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மஞ்சப்பள்ளம் ஆற்று நீர் வழிப் பாதையில் கலப்பதால் நீர்மாசு ஏற்பட்டு மீன்கள் இறந்து உள்ளன. எனவே, மதுக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற சம்பவம் மேலும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.