உக்ரைனின் ராட்சத ட்ரோன் தாக்குதல்! 100+ ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைன் ராட்சத ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தென் ரஷ்யா மற்றும் கிரிமியாவை குறிவைத்து பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இரவு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இடைமறித்ததாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினால், நடந்து வரும் மோதலில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படும்.
இதுவே உக்ரைனால் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கருதப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கிரிமியாவில் 51 ட்ரோன்கள் தகர்க்கப்பட்டுள்ளன. உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கிராஸ்னோடார் கிராய் பகுதியில் மேலும் 44 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டன.
மீதமுள்ள ட்ரோன்கள் பெல்கோரோட், குர்ஸ்க் மற்றும் கருங்கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைனின் தாக்குதல்களால் கிரிமியாவின் செவஸ்டோபோலில் உள்ள ஒரு மின் நிலையம் சேதமடைந்ததாகவும், இதனால் மின் தடை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தென் ரஷ்யாவில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைனில் ரஷ்யா நிலப்பரப்பைக் கைப்பற்றி வரும் நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மாஸ்கோவின் தாக்குதலை எதிர்கொள்ள கீவ் மேற்கொண்ட பதிலடியாக பார்க்கப்படுகிறது.