இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை… காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி தோழன் வெறிச்செயல்!
கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்ததால், 20 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர் 20 வயதான அஞ்சலி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளித் தோழன் விஸ்வா என்ற கிரிஷ் சாவந்த் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அஞ்சலியை ஒரு தலையாக காதலித்த விஸ்வா தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார்.
விஸ்வா வேலைக்கு போகாமல், அடிக்கடி திருட்டு வழக்குகளில் கைதாவதால், அவரது காதலை ஏற்க மறுத்த அஞ்சலி, நட்புடன் தான் பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஸ்வா, தன்னை காதலிக்காவிட்டால், இதே பகுதியில் கடந்த மாதம் ஒருதலை காதலால் கொலை செய்யப்பட்ட நேஹாவைப் போல கொலை செய்துவிடுவதாக மிரட்டிச் சென்றுள்ளார்.
விஸ்வாவின் மிரட்டலுக்கு பயப்படாத அஞ்சலி அவரது காதலை ஏற்க உறுதியாக மறுத்து விட்டார். இந்த நிலையில், வியாழன் அன்று காலையில் அஞ்சலியின் வீட்டிற்குள் நுழைந்த விஸ்வா, அவரது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த அஞ்சலியை மீண்டும் வீட்டிற்குள் இழுத்துச் சென்று பலமுறை கத்தியால் குத்தியதில், அஞ்சலி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது பாட்டியும், இரண்டு சகோதரிகளும் கூச்சலிட்டதால், விஸ்வா அங்கிருந்து தப்பியோடினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அஞ்சலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தப்பியோடிய விஸ்வா எங்கு தலைமறைவாகி இருக்கிறார் என்றும் தேடி வருகின்றனர். முன்னதாக, கடந்த மாதம் இதே ஹூப்ளியில் கல்லூரி வளாகத்தில் வைத்து, ஒருதலைக் காதல் விவகாரத்தில் நேஹா என்ற இளம்பெண்ணை, பயாஸ் என்ற மாணவர் குத்திக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது