பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.
திருநெல்வேலி தியாகராஜநகா் என்ஜிஓ காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், திருநெல்வேலி கிராம வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மகன் அஸ்வின்(17). 10ஆம் வகுப்பு படித்துள்ளாா்.
தென்காசி அருகே மேலகரத்திலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த அஸ்வின், தனது உறவினா்களுடன் பழைய குற்றாலம் அருவிக்கு குளிக்கச் சென்றாராம்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பதறியடித்து வெளியேறினா்.
அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த அஸ்வின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாா்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் பானுப்பிரியா தலைமையில் மாவட்ட உதவி நிலைய அலுவலா் சுரேஷ்ஆனந்த், பிரதீப்குமாா், சிறப்புஅலுவலா் கணேசன், கடையநல்லூா். செங்கோட்டை நிலைய தீயணைப்பு வீரா்கள் மற்றும் காவல் துறையினா் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் அஸ்வினை தேடும் பணியை தீவிரப்படுத்தினா்.
நீண்ட நேரம் தேடலுக்குப் பின் பழையகுற்றாலம் அருவி நீா் வழிந்தோடி செல்லும் வழியில் சுமாா் 1கி.மீ. தொலைவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து, அஸ்வினின் உடல் உடல்கூறாய்வுக்காக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குற்றாலம் அருவிகளில் காவல் துறையினா் கூடுதலாக பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே போதுமான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அதையும் மீறி அருவிகளில் குளிக்கச் சென்றுள்ளனா். தற்போது அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.