கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி
மட்டக்களப்பு (Batticaloa) – கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 9.30 மணி அளவில் குறித்த நிகழ்வு நடைபெற இருந்த போதிலும் மாணவர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஞ்சள் சிவப்பு நிற கொடிகளை காலையில் வந்த காவல்துறையினர் அகற்றியதோடு அவற்றை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
காணொளி பதிவு
இதன் காரணமாக மாணவர்கள் அங்கிருந்து சென்று பின் கஞ்சியினை வழங்கலாமென முடிவெடுத்து கஞ்சி காய்ச்சுவதற்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
இதேவேளை அங்கு வந்த ஏறாவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏனைய காவல்துறை அதிகாரிகளும் பதாகைகள் மற்றும் சுடர்கள் ஏற்றப்படக்கூடாது எனக்கூறி தடுத்ததுடன் அங்கிருந்த பதாகைகளை கிழித்து எறிந்து மாணவர்களை மிகவும் அச்சுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தொடர்ச்சியாக சீருடை தரிக்காத காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் காணொளி பதிவு செய்ததோடு ஊடகவியலாளர்களையும் தெளிவாக தெரியும் வகையில் பதிவுகளை எடுத்திருந்தனர்.
அச்சுறுத்திய காவல்துறையினர்
மேலும் மாணவர்கள் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்த இருந்தவேளை அதை தடுத்ததோடு அந்த இடத்தை விட்டு கலையும் படியும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்லும்படியும் இல்லையென்றால் உங்களை கைது செய்வோம் எனவும் மாணவர்களை காவல்துறையினர் மிரட்டினர்.
இந்த நிலையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள், இதை ஏன் தடுக்கிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கும் சரியான பதில் இல்லாமல் “இவர்களை கலைந்து செல்ல சொல்லுங்கள் இல்லையென்றால் இவர்களை கைது செய்வோம்“ என அச்சுறுத்தி இருந்தார்கள்.
மேலும் அங்கிருந்த அவர்களுடைய பெயர்களை சேகரிப்பதில் காவல்துறையினர் ஆர்வமாக இருந்ததுடன் வீதியால் சென்ற கஞ்சியினை பெற வந்தவர்களை கூட காவல்துறையினர் அச்சுறுத்தி துரத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பெரும் அராஜகத்தை நிகழ்த்திய காவல்துறையினர் கஞ்சிப்பானை, அங்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மேசை என எல்லாவற்றையும் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.