இந்தியா ஆன்மீக குரு இலங்கைக்கு விஜயம்
இந்தியாவை சேர்ந்த ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை (18) நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வந்த அவரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாளை ஞாயிற்றுக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
தொடர்ந்து, நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் சத்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். நிகழ்வில், நாடளாவிய ரீதியில் வாழும் கலையின் 12 திறன் மேம்பாட்டு மையங்களை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த மையங்கள் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன்களை வளர்த்து அவர்களை வேலைக்குத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்புக்கிணங்க, திங்கட்கிழமை (20) காலை 10.00 மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.