இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மே 18 போர் நினைவு நாளை முன்னிட்டு அவரால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“போர் என்பது வெற்றியல்ல, அது நாடு அல்லது மனித குலத்துக்கு பாரிய தோல்வியாகும். 30 வருடகால இனப்போராட்டம் காரணமாக நாடு பலவற்றை இழந்தது.
பல இழப்புகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாய்மார் தங்களின் பிள்ளைகளை இழந்தனர். அதேபோல் பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்தனர். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என இன அடிப்படையில் நாம் பிளவடைந்துள்ளோம்.
இந்த யுத்தத்தின் காரணமாக நான் எனது கண்ணை இழந்தேன். மேலும் பல இழப்புக்களை எதிர்க்கொண்டேன்.
இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம்.
பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிக்கவும், மனங்களில் பிசாசுகளுக்கு பதிலாக கடவுளை நிலைப்படுத்தவும் ஒருவருக்கொருவர் ஆறுதலை பரிமாற்றிக் கொள்ளவும் இன்றைய தினத்தில் உறுதியளிப்போம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.