UK Seasonal Worker Visa: ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்
பிரித்தானியா, Seasonal Worker visa என்னும் பருவகாலப் பணியாளர் விசா வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இது தற்காலிக பணியாளர்களுக்கு தற்போதைக்கு நல்ல செய்திதான் என்றாலும், அதன் பின்னணியில் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது.
தற்காலிக பணி விசா நீட்டிப்பு
பிரித்தானியா, Seasonal Worker visa என்னும் பருவகாலப் பணியாளர் விசா வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது, 2029ஆம் ஆண்டுவரை, நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த விசா பெற்று, பிரித்தானியாவுக்கு வந்து, இரண்டு வகை பணிகள் செய்யலாம்.
ஒன்று தோட்டத்துறையில் ஆறு மாதங்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் பறிக்கும் பணி. இரண்டு, கோழிப்பண்ணையில் சுமார் மூன்று மாதங்கள் பணி. இந்த பழங்கள், காய்கறிகள் பறிக்கும் பணிக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், கோழிப்பண்ணையில் பணி செய்ய ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் திகதிவாக்கில் விண்ணப்பிக்கவேண்டும்.
ஒரு கெட்ட செய்தி
விடயம் என்னவென்றால், எந்த நாடுமே தனக்கு ஏதாவது ஒரு வகையிலாவது லாபமில்லையென்றால் வெளிநாட்டவர்களுக்கு எளிதில் விசா வழங்காது. அதற்கு பிரித்தானியாவும் விதிவிலக்கல்ல!
தற்போது இந்த பருவகாலப் பணியாளர் விசா நீட்டிக்கப்படுவதன் பின்னணியிலும் அப்படி ஒரு நோகம் உள்ளது.
அதாவது, உணவு விநியோகத்துறையில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவே இந்த விசா வழங்கல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், ஆண்டுதோறும் இப்படி பருவகாலப் பணிகளுக்காக வெளிநாட்டவர்களை நம்பியிருப்பதை குறைப்பதற்காக, பிரித்தானிய அரசு, இந்த துறைகளில் தானியங்கி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுவருகிறது.
ஆக, இந்த விசா நீட்டிப்பின் நோக்கமே, இத்தகைய பணிகளுக்காக நீண்ட காலத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்காமல், தானியங்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், அதற்காக முதலீடு செய்யவும் தொழில் செய்வோருக்கு கால அவகாசம் கொடுப்பதற்காகத்தான் என பிரித்தானிய சுற்றுச்சூழல் செயலரான Steve Barclay கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.