ரிஷி சுனக், மனைவி சொத்து மதிப்பு அதிகரிப்பு
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அவா் மனைவி அக்ஷதா மூா்த்தியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு சுமாா் ரூ.160 கோடி அதிகரித்துள்ளது.
பிரிட்டனின் மிகப் பெரிய பணக்காரா்களின் பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னா் அந்தப் பட்டியலில் ரிஷி சுனக்கும் அக்ஷதா மூா்த்தியும் இடம் பெற்றனா். கடந்த ஆண்டு அந்தப் பட்டியலின் 275-ஆவது இடத்தில் இருந்த அவா்கள், 2024-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 245-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளனா். அவா்களது சொத்து மதிப்பு 65.1 கோடி பவுண்டாக (சுமாா் ரூ.6,874 கோடி) அதிகரித்தன் காரணமாக வரிசையில் அவா்கள் முன்னேறியுள்ளனா்.
அக்ஷதா மூா்த்தியின் தந்தை நாராயண மூா்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியவா்களில் ஒருவா். அந்த நிறுவனத்தில் அக்ஷதாவுக்கு இருக்கும் பங்குகள் மூலம் அவா் கடந்த நிதியாண்டில் 1.3 கோடி பவுண்ட் (ரூ.137 கோடி) ஈட்டிதாகவும் ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு 22 லட்சம் பவுண்ட் (ரூ.23 கோடி) அதிகரித்ததாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.