நெடுந்தீவுக்கு தடையில்லா மின்சாரம்
நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமக்கான அவசர தேவைகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு துரித கதியில் புதிய மின்பிறப்பாக்கி பெற்றுத்தந்து தடையற்ற மின்சார சேவைக்க வழிவகை செய்து கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு(Douglas Devananda) நெடுந்தீவு மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மின்பிறப்பாக்கிகளில் அடிக்கடி ஏற்படும் தொழினுட்ப கோளாறுகள் காரணமாக நெடுந்தீவு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்களால் தாம் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்தும் அதற்கான தீர்வை வழங்குமாறும் கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
தொடர் முயற்சி
இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்ட அமைச்சர் நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.
அமைச்சரது தொடர் முயற்சிகள் காரணமாக கடந்தவாரம் கடற்படையினரது உதவியுடன் பாரிய மின்பிறப்பாக்கி ஒன்று கொழும்பிலிருந்து சுன்னாகம் பிரதான மின்சார நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த மின் பிறப்பாக்கி கடற்படையினரது உதவியுடன் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில் இன்று நெடுந்தீவு மின்சார நிலையத்தில் பொருத்தப்பட்டு நெடுந்தீவின் பிரதான மின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.