அம்பாறையில் இரு வேறு இடங்களில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி (video)
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் உள்ள வளத்தாப்பிட்டி, வீரமுனை பகுதிகளில் வெள்ளிக்கிழமை(17) மாலை இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் ,சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்குஇ கிழக்கு மற்றும் சர்வதேச நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனைத் தமிழின அழிப்பு வாரம் என பிரகடணப்படுத்தி வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புகள் இந்நினைவேந்தலை அனுஸ்டித்து வருகின்றது .
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்விற்கு பொலிஸாரினால் 5 பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் பின்னர் அத்தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.