ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரித்த அதிகாரிகள்
ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரசாயனம் கலந்த மாம்பழங்கள்
தமிழகத்தில் அதிகளவில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
அதே போல் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இதில் சில மாம்பழங்கள் நிறமாக உள்ளதாகவும், ஆனால் சுவை இல்லை எனவும் ரசாயனம் முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரித்த அதிகாரிகள்
மாம்பழம் போன்ற பழ வகைகளை செயற்கையாக பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
இவ்வகை ரசாயனம் கலந்த பழங்களை உட்கொண்டால், மயக்கம், அதீத தாகம், வாந்தி, சரும பாதிப்புகள் உண்டாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ரசாயனம் கலந்த பழங்கள் தடை செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இவ்வகை பழங்களை வர்த்தகர்கள் கொள்முதல் செய்யக்கூடாது எனவும், வியாபாரிகள் விற்பனைச் செய்யக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
கால்சியம் கார்பைடு ரசாயனத்துக்கு பதில், பாதுகாப்பான முறையில் எத்திலின் கேஸ் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ரசாயனம் கலந்த பழங்களின் விற்பனை குறித்து புகாரளிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.