இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்… வேலை, பாடசாலை அல்லது நர்சரிக்கு செல்ல வேண்டாம்
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோவைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்
பிரித்தானியாவில் கடந்த ஆண்ட்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நோரோவைரஸ் பாதிப்பானது 75 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எவரேனும் நோரோவைரஸ் பாதிப்பை உறுதி செய்திருந்தால், கட்டாயம் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றே நிபுணர்கள் தரப்பு உறுதி செய்துள்ளது. உடம்பில் நீர்சத்து குறைபாடால் நோரோவைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இளம் சிறார்கள் மற்றும் வயதானவர்கள்,
நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கக் கூடியவர்கள் நோரோவைரஸ் அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாகவும், நோரோவைரஸ் பாதிப்பு உறுதி செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
3 நாட்கள் வரை அறிகுறிகள் நீடிக்கும்
மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால், தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், நோரோவைரஸ் அறிகுறிகள் மறையும் வரையில் 48 மணி நேரம் வேலைக்கு அல்லது பாடசாலை அல்லது நர்சரிக்கு செல்ல வேண்டாம் என்றும்,
இந்த நேரத்தில் எவருக்கும் உணவு தயாரிக்கவும் முயற்சிக்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நோரோவைரஸ் என்பது மிக வேகமாக பரவும் ஒரு தொற்று. இதன் பொதுவான அறிகுறிகள் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு, தலைவலி உள்ளிட்டவை காணப்படலாம்.
அறிகுறிகள் பொதுவாக 12 முதல் 48 மணிநேரங்களுக்குப் பிறகு வெளிப்படுகின்றன. பொதுவாக 1 முதல் 3 நாட்கள் வரை அறிகுறிகள் நீடிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நோரோவைரஸ் மிக எளிதில் பரவக்கூடியது. கெட்டுப்போன உணவு, குடிநீர், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ளிட்டவையால் பரவலாம்.