பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
பாஜக வேட்பாளருக்கு 8 முறை இளைஞர் ஒருவர் வாக்களித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில்,தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ஆம் தேதி அமைதியான முறையில் நிறைவடைந்தது. இந்தநிலையில் தற்போது ஃபரூக்காபாத் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதலங்களில் வெளியான வீடியோ ஒன்றில், பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு, இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவை தனது பக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையமே விழித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏப்ரல் 19, 26, மே 7 மற்றும் 13 ஆம் தேதி 4 கட்ட வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 ஆம் கட்டமாக நாளை மோகன்லால்கஞ்ச், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, ஃபதேபூர், பாரபங்கி, கௌசாம்பி, பைசாபாத், கைசர்கஞ்ச் மற்றும் கோண்டா ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.