இத்துனூண்டு தான்.. ஆனால் சத்தம் யானையை விட அதிகம் – அதிசய மீன் பற்றி தெரியுமா?
சிறிய அளவிலான மீன் ஒன்று யானையை விட அதிக ஒலி எழுப்புவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதிக ஒலி
உலகின் மிகச் சிறிய மீன்களில் ஒன்றாக டேனியோனெல்லா செரிபிரம் (Danionella cerebrum) கருதப்படுகிறது. இந்த மீன் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக்கூடிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. யானை தனது தும்பிக்கை மூலம் 125 டெசிபல் வரை ஒலி எழுப்பும்.
ஆனால், அரை இன்ச் கூட நீளம் இல்லாத இந்த குட்டி மீன் 140 டெசிபலுக்கு மேல் ஒலியை எழுப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு புல்டோசரின் அளவிற்கும், துப்பாக்கி குண்டின் அளவிற்கும் அதிக சத்தமுடையதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
நீச்சல் பை
மேலும், சிறிய அளவிலான மீனிலிருந்து இந்த சத்தம் வருவது அசாதாரணமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனின் அமைப்பு கண்ணாடி போல் இருப்பதால் அதன் உடல் உறுப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் எளிதாகக் காண முடியும்.
இதன் உடலிலுள்ள நீச்சல் பை (swim bladder) என்ற உறுப்பின் மூலம் ஒலி வருவதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த மீன் தனது தசைகளை சுருக்கி, விலா எலும்பை இழுத்து, தசையின் உள்ளே இருக்கும் குருத்தெலும்புடன் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த குருத்தெலும்பு வெளியேறும்போது நீச்சல் பையைத் தாக்க அதன் மூலம் சத்தத்தை உருவாக்குகிறது.