;
Athirady Tamil News

இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலை ஆதரிக்க மொட்டுக்கட்சி தீர்மானம்

0

அதிபர்த் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் (slpp) பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராகப் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசின் உயர்மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதிபர்த் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டது.

அதிபர்த் தேர்தல்
இந்தத் தகவல்களுக்கு ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் பதிலளிக்கையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான(Imf) நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனக் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அதிபர்த் தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அதிபர்த் தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிபர்த் தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் அதிபர்த் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடத்தப்பட வேண்டும்.

ரணிலுக்கு ஆதரவு
இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு அதிபர் ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்தக் கட்சியின் மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் சம்மேளனத்தினர் அதிபர் ரணிலை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு பஸில் ராஜபக்சவின்(Basil Rajapaksa )ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.

அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.