தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள்
நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தமது தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையம், தனியான பொது நிறுவனமாக மாற்றப்படுவதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய நிறுவனத்திற்கு தற்போதைய பணியாளர்களில் சுமார் 200 பேரை மட்டுமே தக்கவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய நிறுவனம்
இதன் பின்னர் எஞ்சியுள்ள பணியாளர்களில் இருந்து, புதிய நிறுவனம் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட அரச நிறுவனமாக செயற்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு, கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்தநிலையில், எதிர்காலத்தில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் திருகோணமலைக்கு மாற்றுவது மற்றும் எரிபொருள் பண்ணையை அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.