யாழில் இருந்து வற்றாப்பளை சென்று திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரிக்கு அருகில் விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரி பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விசாக பொங்கலுக்கு , யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இருந்து வாடகைக்கு பேருந்து ஒன்றினை ஒழுங்கு செய்து பக்தர்கள் சென்று இருந்தனர்.
பொங்கல் திருவிழாவை முடித்துக்கொண்டு , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை பூநகரி , சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
அதில் பேருந்தில் பயணித்த 06 பேர் காயமடைந்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.